tamilnadu

img

திரிணாமுல் காங்கிரசின் தவறான ஆட்சியே பாஜக வளர்வதற்கு இடம் கொடுத்திருக்கிறது - புத்ததேவ் பட்டாச்சார்யா பேட்டி

திரிணாமுல் காங்கிரசின் மோசமான ஆட்சிபரிபாலனத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பாஜக மேற்கு வங்கத்திற்குள் காலூன்றிக் கொண்டிருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சார்யா கூறினார்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க நாளேடான கணசக்தி இதழுக்கு புத்ததேவ் பட்டாச்சார்யா பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதன் சாராம்சங்கள் வருமாறு:

பாஜக இம்மாநிலத்திற்குள் காலுன்றியிருப்பதன் ஆபத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருக்கிறது. 2004இல் மேற்கொண்டதைப்போல இது மிகவும் சாத்தியம்தான்.


2004இல் இடதுசாரிகள் மத்திய அரசாங்கத்தின் கொள்கைகளை வடிவமைப்பதிலும், மத்திய அரசு மதச்சார்பற்ற அரசாக விளங்குவதை வலுப்படுத்துவதிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கணிசமான அளவிற்குப் பங்கு வகித்ததை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 

அத்தகைய சூழ்நிலை இன்றும் தொடர்கிறது. மதவெறி சக்திகள் தனிமைப்படுத்தப்பட்டு, ஒரு மதச்சார்பற்ற அரசாங்கம் அமைந்திட வேண்டும். இடதுசாரிகளின் பலம் அதிகரித்திருக்கிறது. அதன் நிலையும் வலுப்பட்டிருக்கிறது. எனவே 2014 நிலைமையை மீண்டும் கொணர்தல் சாத்தியம்தான். இடதுசாரிகள் தங்கள் சக்திகளை ஒருமுகப்படுத்திட வேண்டியது இன்றைய தேவையாகும்.


இளைஞர்கள் விரக்தி

திரிணாமுல் காங்கிரசின் தவறான ஆட்சி, மேற்கு வங்கத்தில் பாஜக காலூன்றுவதற்கு வழியேற்படுத்திக் கொடுத்திருக்கிறது. திரிணாமுல் காங்கிரசின் கொள்கைகள், இளைஞர்களை விரக்தி அடையச் செய்திருக்கின்றன. திரிணாமுல் காங்கிரஸ் மாநிலத்தில் ஓர் அராஜக நிலைமையை உருவாக்கி இருக்கிறது. அது, இளைஞர்களைத் தவறான விதத்தில் வழிகாட்டிக் கொண்டிருக்கிறது. மாநிலத்தில் தொழில் வளர்ச்சியும் இல்லை, விவசாய வளர்ச்சியும் இல்லை. மாநிலம் முழுதும் சமூக விரோத சக்திகள்தான் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கின்றன.


இத்தகைய சூழ்நிலையை பாஜக நன்கு பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. திரிணாமல் காங்கிரசின் தவறான ஆட்சி காரணமாகவே பாஜக இங்கே வளர்ந்திருக்கிறது. இது மிகவும் ஆபத்தானதாகும். திரிணாமுல் காங்கிரஸ் என்கிற எண்ணெய்ச் சட்டிக்குப் பயந்து, பாஜக என்கிற எரிகிற நெருப்பில் விழுவது புத்திசாலித்தனமாகாது. மாநிலத்தில் இவ்விரு கட்சிகளுமே வகுப்புவாதத் தீயை வளர்த்துக் கொண்டிருக்கின்றன. தங்களின் உடனடி ஆதாயத்திற்காக இவ்வாறு இவ்விரு கட்சிகளும் மதவெறி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.


திரிணாமுல் காங்கிரஸ் கடைப்பிடித்துவரும் மதவெறிக் கொள்கைகளின் காரணமாக, மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மதவெறித் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இத்தகைய இவர்களின் அரசியல் வேரோடு வெட்டி எறியப்பட வேண்டியதாகும். அதற்குப் பதிலாக இந்து – முஸ்லீம் ஒற்றுமை நிறுவப்பட வேண்டும்.


தீவிரவாதத்திற்கான மாடல்

மோடி, மதவெறித் தீவிரவாதத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் ஒரு மாடலாக இருக்கிறார். அவர் முதலாளிகளுக்கு அனுப்பியுள்ள செய்திதான், “நான் உங்கள் காவலாளி” என்பதாகும். இவரது இந்த மாடலை இடதுசாரிகள் வெல்ல முடியும். இதற்கு மாற்றாக, ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் சுதந்திரமான பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் ஒரு மாற்று அரசாங்கத்தை அளித்திட முடியும். நாட்டில் பாஜக வகையறாக்கள் கட்டவிழ்த்துவிடும் மதவெறிப் பாசிசத்தை வேறோடும் வேறடி மண்ணோடும் களைந்து எறிந்திட வேண்டும்.


இவ்வாறு புத்ததேவி பட்டாச்சார்யா அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். புத்ததேவ் பட்டாச்சார்யாவின் உடல் நலிவுற்றிருப்பதால் அவரது அரசியல் வாழ்வில் முதன்முறையாக அவர் தேர்தல் பிரச்சாரங்களில் பங்கேற்கவில்லை. 


(ந.நி.)


;